LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் பிறந்தநாள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் பிறந்தநாளை நவீன இலக்கிய எழுத்தாளர்களுள் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் தி.ஜானகிராமன்.  தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவக்குடி என்னும் சிற்றூரில் 1921-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி பிறந்தார். 

அவருடைய தந்தை மிகச்சிறந்த சொற்பொழிவாளரான தியாகராஜ சாஸ்திரிகள் ஆவார்.  தி.ஜானகிராமன் பிறந்த ஆறாவது மாதத்திலேயே அவருடைய குடும்பம் கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்தது. 

2 ஆண்டுகள் மட்டும் அங்கிருந்த பின்னர் தி.ஜானகிராமனின் வாழ்வு தஞ்சைக்கு மாற்றலானது. தஞ்சாவூர் புனிதபீட்டர் தொடக்கப் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரி பள்ளியிலும் தொடக்கக்கல்வி கற்ற அவர், உயர்நிலைக் கல்வியை கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர் மீடியட்டும், பி.ஏ.வும் படித்த அவர், எல்.டி. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தி.ஜானகிராமனுக்கு, கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.

1943-44-இல் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஓராண்டு சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தார். அதன்பிறகு, 1945 முதல் 1954 வரை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குத்தாலம் மற்றும் அய்யம்பேட்டை பள்ளிகளில் பணிபுரிந்தார்.

பின்னர், 1954 முதல் 14 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிய தி.ஜானகிராமன் தில்லி வானொலி நிலையத்தில் 1968 முதல் 1974 வரை உதவித் தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று, 1974 முதல் 1981 வரை தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருக்குச் சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கி இருந்தது. இவருடைய செம்பருத்தி, மோகமுள் ஆகிய நாவல்களில் சுதந்திர தாகம், அந்நியத்துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைக் காணமுடியும்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் தி.ஜானகிராமன் கும்பகோணம் ஆங்கிலப் பேராசிரியர் சீதாராமையர் மூலம் ஆங்கில இலக்கியங்களை அறிந்தவர், கல்லூரிப் படிப்பை முடித்து, பணிக்குச் செல்லாமல் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.

தந்தையோடு புராண இசைச் சொற்பொழிவுக்குச் சென்றதோடு அவருக்குப் பின்பாட்டுப் பாடியதால் தி.ஜானகிராமன், இளம் வயதிலேயே இசையறிவு வாய்க்கப் பெற்று இருந்தார். உமையாள்புரம் சாமிநாதையர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயர் ஆகியோரை இசைத்துறை ஆசிரியர்களாகக் கொண்டு இருந்தார்.

வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். சமையற் கலையிலும் வல்லுநராகத் திகழ்ந்த தி.ஜானகிராமன், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார்.

தி.ஜானகிராமன் எழுதிய 85 சிறுகதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோகமுள், அமிர்தம், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம், மலர்மஞ்சம், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, செம்பருத்தி ஆகிய நாவல்களும்; பிடிகருணை, மனிதாபிமானம், யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி, அடி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், எருமைப் பொங்கல், கமலம், கொட்டுமேளம், சிவஞானம் முதலிய சிறுகதைகளும்; நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார் ஆகிய நாடகங்களும்; உதய சூரியன், (ஜப்பான் பயண நூல்), அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை), கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை), நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாகப் பயணம்) ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதி உள்ளார். 

இலக்கியம் மற்றும் இசைக்கலை பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தி.ஜானகிராமன் சிறந்த இசை விமர்சகரும்கூட.

தி.ஜானகிராமன், மொழிபெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். அறிவியல்துறை சார்ந்து, என்.டச் எழுதிய "அணு எங்கள் ஊழியன்; ஜார்ஜ் காமோ எழுதிய "பூமி என்னும் கிரகம்' ஆகிய நூல்களை மொழிபெயர்த்து உள்ளார். மேலும், நோபல் பரிசுபெற்ற கிரேசியா டெலடாவின் அன்னை, டெல்மேஜரின் "கிரிஸ்கா' ஆகியவற்றையும் மொழிபெயர்த்து உள்ளார்.

இவைதவிர, வில்லியம் ஃபாக்னரின் "12' எனும் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுதியும், பார் லாகர்க்விஸ்ட் எழுதிய "ட்வார்ப்' எனும் நாவலும் தி.ஜானகிராமனால் "குள்ளன்' என எழுதப்பட்டு அச்சேறாமல் இருக்கின்றன.
தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள்' நாவல் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மேலும் மரப்பசு, மோகமுள், அம்மா வந்தாள் ஆகியவை மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

மோகமுள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. "சக்தி வைத்தியம்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

தி.ஜானகிராமன் என்றாலே அவருடைய நாவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டதால் அவரைச் சிறந்த நாவலாசிரியராகக் கருதுவதே வழக்கமாகிவிட்டது. ஆனால், தி.ஜானகிராமனின் எழுத்தழகும் ஆழ்மனமும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான் என்று உறுதியாகக் கூறலாம்.

தி.ஜானகிராமனின் எழுத்தைப் படித்து ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்கள்தாம் அதிகம். பாலியல் உணர்வுகளை குறிப்பாகப் பெண்களை ஒளிவு மறைவு இல்லாமல் அவர் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. இதற்கெல்லாம் அவர் எந்தவித மறுப்பும் சொல்லாமல், என் கடன் எழுத்துப்பணியே என்று இருந்தார். ஓய்வு பெற்று சென்னையில் வசித்தபோது "கணையாழி' பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 1982-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி காலமானார்.

என்றைக்கும் தமிழ் எழுத்துலகில் வாழ்ந்து வரும் தி.ஜானகிராமனின் பிறந்தநாளில் அவரது நினைவை 'வலைத்தமிழ்' போற்றுகிறது.

by Mani Bharathi   on 01 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.