LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 527 - அரசியல்

Next Kural >

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன. அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம்உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும்நுகருமாறு வைத்தல்.)
மணக்குடவர் உரை:
காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.
தேவநேயப் பாவாணர் உரை:
காக்கை கரவா கரைந்து உண்ணும் - காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும் ; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம். சுற்றத்தோடு நுகருஞ் செல்வங்கள் பேரளவின; பல்வகையின; பொதுவுடைமை போல்வன . காக்கைத் தன்மைகள் அன்பு , ஒற்றுமை , கூட்டுறவு முதலியன . 'காக்கை', 'ஆக்கம்', பால்பகா வஃறிணைப் பெயர்கள். ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிக் கொடுப்பதிலும்) காக்கையானது (தீனி கிடைத்தவுடன் தனக்குமட்டும் என்று மறைக்காமல்) கரைந்து கத்தித் தன்னுடைய சுற்றமான மற்றக் காகங்களையும் உண்ண அழைக்கும். அப்படித் தன் சுற்றத்தாரையும் தானே அழைத்துத் தனக்குக் கிடைத்த செல்வத்தை அவர்களும் அனுபவிக்கச் செய்கிற குணமுள்ள வர்களுக்கே துணைப்பலமும் அதிகப்படும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காகங்கள் தமக்கு இரை கிடைத்தவுடன் அதனை மறைக்காமல் தமது இனத்தை அழைத்து அதனோடு உண்ணும். சுற்றத்தினால் அடையக்கூடிய செல்வங்களும் அத்தன்மை உடையவர்களுக்கே உண்டாகும்.
Translation
The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet.
Explanation
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives
Transliteration
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum Annanee Raarkke Ula

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >