LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1179 - கற்பியல்

Next Kural >

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)
மணக்குடவர் உரை:
அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
(நீயும் ஆற்றி நின் கண்களுந் தூங்குதல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா-காதலர் வராதிருக்கும்போது அவர் வரவுநோக்கி வழிமேல் விழிவைத்துத் தூங்கா ; வரின் துஞ்சா-அவர் வந்த பின்போ மீண்டும் பிரிதலஞ்சித் தூங்கா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன-இங்ஙனம் அவ்விருநிலைமையிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை யடைகின்றன. என் கண்கள் ஒருபோதும் தூங்கும் நிலைமையில்லை யென்பதாம்.
கலைஞர் உரை:
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவரைக் காணாமல் இப்படித் தவிக்கின்ற கண்கள்) அவர் இல்லாத காலங்களில் அவர் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தால் தூங்குவதில்லை. அவர் வந்துவிட்டாலோ (அவரோடு இடைவிடாது இன்பமனுபவிக்க விரும்பி) தூங்குவதில்லை, அதனால் இந்தக் கண்களால் எனக்கு எப்போதும் துன்பந்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
காதலர் வராதபோது அவர் வரவு பார்த்துக் கண்கள் துயிலவில்லை; வந்தபோது பிரிவாரோ என்று அஞ்சித் துயிலவில்லை. ஆதலால் இரு நேரங்களிலும் கண்கள் தூங்கமுடியாமல் துன்பத்தினை அடைந்தன.
Translation
When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear.
Explanation
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
Transliteration
Vaaraakkaal Thunjaa Varindhunjaa Aayitai Aaragnar Utrana Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >